குழந்தை இறந்து பிறந்த நிலையில் தாயும் சாவு
குழந்தை இறந்து பிறந்த நிலையில் தாயும் உயிரிழந்தார்.
துவரங்குறிச்சி:
4 மகன்கள்
திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த அக்குலம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி ஐஸ்வர்யா(வயது 36). இந்த தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஐஸ்வர்யா மீண்டும் கர்ப்பமானார். இது பற்றி அவர், கிருஷ்ணனிடம் கூறியதையடுத்து, அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. தற்போது ஐஸ்வர்யா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
விஷம் குடித்தார்
இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஐஸ்வர்யாவை கிருஷ்ணன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா கடந்த 21-ந் தேதி விஷம் குடித்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சாவு
அங்கு கடந்த 24-ந் தேதி ஐஸ்வர்யாவிற்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஐஸ்வர்யா உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.