திருமணத்துக்கு மறுத்த காதலனை போராடி கரம் பிடித்த ஆசிரியையின் தாலியை கழற்றி வீட்டை விட்டு துரத்திய மாமியார் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசார் காலில் விழுந்து கதறியதால் பரபரப்பு
விருத்தாசலத்தில் திருமணத்துக்கு மறுத்த காதலனை போராடி கரம் பிடித்த ஆசிரியையின் தாலியை கழற்றி வீட்டை விட்டு மாமியார் துரத்தினார். நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசார் காலில் விழுந்து ஆசிரியை கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கஸ்பாவை சேர்ந்தவர் கல்பனா (வயது 30). இவர், விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். இவரும், பக்கத்து தெருவை சேர்ந்த ஜெகன்(32) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு ஜெகன் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக ஜெகன், கல்பனாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கல்பனா, தன்னை காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக ஜெகன் மீது கடந்த 2 மாதத்திற்கு முன்பு விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது, ஜெகன் கல்பனாவை காதலித்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் கடந்த 28-8-2022 அன்று கல்பனாவும், ஜெகனும் போலீசார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
வீட்டை விட்டு துரத்தினர்
இந்த நிலையில் தாலி கட்டிய நாளில் இருந்து ஜெகன், கல்பனாவுடன் இணைந்து வாழாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெகன் வீட்டாரும் கல்பனாவை மருமகளாக ஏற்றுக்கொள்ள தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதற்கிடையே ஜெகன் தனக்கு தாலி கட்டி விட்டு, தன்னுடன் வாழாமல் தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடித்து தருமாறு விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் கல்பனா புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கல்பனா அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார்.
இந்த நிலையில் காதல் கணவர் ஜெகன் வீட்டிற்கு வந்ததை அறிந்த கல்பனா, உடனடியாக அங்கு சென்றார். அப்போது, அங்கிருந்த மாமியாரும் அவரது 3 நாத்தனார்களும் சேர்ந்து கல்பனாவை அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளனர். பின்னர் கல்பனா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றபோது, அங்கு சென்ற மாமியார் மற்றும் நாத்தனார்கள் அவரை தாக்கி, கழுத்தில் ஜெகன் கட்டிய தாலி கயிற்றை கழற்றி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்பனா புகார் கொடுப்பதற்காக விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜெகனின் தாய் மற்றும் சகோதரிகள் கல்பனாவை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
காலில் விழுந்து கதறல்
இதுபற்றி அறிந்த போலீசார், அங்கு வந்து விசாரித்தபோது, தன்னை மாமியாரும் நாத்தனார்களும் சேர்ந்து அடித்து கொடுமைப்படுத்தி தாலி கயிற்றை கழற்றி எடுத்து சென்று விட்டார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தாலி கட்டிய காதல் கணவரை கண்டுபிடித்து அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் காலில் விழுந்து கல்பனா கதறி அழுதார்.
இதையடுத்து அவரை போலீசார் சமாதானப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.