கணவன்- மனைவி தகராறை தட்டிக்கேட்ட மாமியார் அடித்துக் கொலை...!
ஆம்பூர் அருகே கணவன்- மனைவி தகராறை தட்டிக்கேட்ட மாமியார் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர் அருகே கணவன்- மனைவி தகராறை தட்டிக்கேட்ட மாமியார் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப தகராறு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்ன வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி ஹேமாவதி (வயது 58). இவர்களது மகள் உஷா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (30) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரேம்குமார் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
பிரேம்குமாருக்கும், உஷாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் தகராறு நடந்துள்ளது. பின்னர் பிரேம்குமார் வெளியே சென்று விட்டு மதிய உணவுக்கு வீடு திரும்பினார். அவருக்கு உஷா தான் செய்த மீன் குழம்பு உணவை பரிமாறி உள்ளார். அப்போது பிரேம்குமார் தனது மனைவிக்கு உணவை ஊட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
அடித்துக் கொலை
இதனை ஏற்க மறுத்த உஷா சாப்பாட்டை தட்டி விட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார், மனைவி உஷாவை தாக்கியுள்ளார். இதில் உஷா கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் மாமியார் வீட்டிற்கு வந்த பிரேம்குமார் மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் உஷா செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை அங்கிருந்த உஷாவின் தாய் ஹேமாவதி தட்டிக் கேட்டு தடுக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த பிரேம்குமார் தனது மாமியாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பிரேம்குமாரின் மனைவி உஷா உமராபாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.