கலெக்டர் அலுவலகத்தில்தாய்- மகன்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தில்தாய்- மகன்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தாய்- மகன்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்


மேல்மலையனூர் தாலுகா பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). இவர் நேற்று காலை தனது அண்ணன் சதீஷ் (28), தாய் வெள்ளக்காரச்சி (49) ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் திடீரென தாங்கள் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து, 3 பேரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் மேல்மலையனூர் தாதவரத்தம்மன் கோவில் தெருவில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறோம். எங்களுடைய ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் வந்த 3 பேர் பரோட்டா கேட்டனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததால் நாங்கள் பரோட்டா கொடுக்க மறுத்தோம். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து எங்களை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதோடு ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்து வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் அவர்கள் 3 பேர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில் அவர்கள், எங்களை தொடர்பு கொண்டு புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி மிரட்டுகின்றனர். இதன் காரணமாக எங்களுடைய ஓட்டல் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதை கேட்டறிந்த போலீசார், உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story