ஓட்டிப்பார்த்து விட்டு வாங்குவதாக கூறி மோட்டார்சைக்கிளை திருடிச்சென்ற ஆசாமி
ஓட்டிப்பார்த்து விட்டு வாங்குவதாக கூறி மோட்டார்சைக்கிளை திருடிச்சென்ற ஆசாமி
பல்லடம்
பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரத்தைசேர்ந்தவர் அருண்குமார் (வயது 28).இவர் பஞ்சர் ஒட்டும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய ஆன்லைன் செயலியில் படங்கள் மற்றும் விவரங்களை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ஒருவர் தான் பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்றும் உங்கள் மோட்டார்சைக்கிளை விலைக்கு வாங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய அருண்குமார் அவரை பல்லடத்திற்கு வரச் சொல்லி உள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் பல்லடம் வந் பொள்ளாச்சியை சேர்ந்த நபர், அருண்குமாரின் பஞ்சர் கடை முன்பாக மோட்டார் சைக்கிளை பார்வையிட்டார். பிறகு மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்ப்பதாக கூறி சிறிது தூரம் அதை எடுத்துச்சென்ற அந்த நபர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
இதையடுத்து அருண்குமார் தன் நண்பர் சிலருடன் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற பொள்ளாச்சி ஆசாமியை பல இடங்களுக்கும் தேடி விசாரித்துள்ளனர். அதன்பின்னர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் அருண்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் மர்ம ஆசாமி மோட்டார்சைக்கிளை திருடிச் செல்லும் காட்சிகளை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தவற்றை வெளியிட்டு மோட்டார்சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர். வடிவேலு சினிமா பாணியில் மோட்டார் சைக்கிள் திருடிய சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
----------------