வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்


வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
x

வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை
சிவகங்கை நகர சபை தலைவர் துரைஆனந்த் மற்றும் ஆணையாளர் பாஸ்கரன் ஆகியோர் கூறியதாவது:- நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை 6 மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் பணத்தில் இருந்து தான் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்ய முடியும். ஆனால் நகராட்சி பகுதியில் வசிக்கும் வியாபாரிகள், பொதுமக்கள் சிலர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தவில்லை. இதனால் கடந்த மார்ச் 31-ந் தேதி முடிய நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், குத்தகை பாக்கி என மொத்தம் ரூ.2 கோடியே 37 லட்சம் பாக்கியாக உள்ளது.

இது தவிர நடப்பு அரையாண்டிற்கு, அதாவது இந்த மாதம் 31-ந் தேதி முடிய ெசலுத்த வேண்டிய வரி பாக்கி மொத்தம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரம் உள்ளது. இதன் மூலம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய மொத்த பாக்கி தொகை ரூ.4 கோடியே 59 லட்சத்து 91 ஆயிரம் நிலுவையாக உள்ளது. இந்த பாக்கியை செலுத்தினால் மட்டுமே நகராட்சியின் வளர்ச்சி பணிகளை செயல்படுத்த முடியும். எனவே பொதுமக்கள் தவறாது வரி பாக்கியை செலுத்தி நகராட்சியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

வருகிற 31-ந் தேதிக்குள் பாக்கி செலுத்தாதவர்கள் வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்வதுடன், ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் நகராட்சி கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்தாதவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றனர்.


Next Story