தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ரூ.61 கோடி கடன் சுமை; நகராட்சி கூட்டத்தில் தகவல்


தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ரூ.61 கோடி கடன் சுமை; நகராட்சி கூட்டத்தில் தகவல்
x
தினத்தந்தி 24 Aug 2023 3:00 AM IST (Updated: 24 Aug 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ரூ.61 கோடி கடன் சுமை இருப்பதாகவும், மக்கள் வரிகள் செலுத்துவதில் சுணக்கமாக செயல்படுவதாகவும் நகர்மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தேனி

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ரூ.61 கோடி கடன் சுமை இருப்பதாகவும், மக்கள் வரிகள் செலுத்துவதில் சுணக்கமாக செயல்படுவதாகவும் நகர்மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நகராட்சி கூட்டம்

தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம், அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் நகராட்சி செலவினம், வளர்ச்சித் திட்டப்பணிகள், ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு உள்பட 87 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், பங்கேற்ற கவுன்சிலர்கள் சிலர், தங்கள் பகுதியில் சுகாதார பணிகள் முழுமையாக நடக்கவில்லை என்றும், தெருக்களில் குப்பைகள் தேங்கி இருப்பதாகவும் கூறினர். அதற்கு நகராட்சி ஆணையாளர் கணேசன் பதில் அளித்து பேசுகையில், "தினமும் தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக குப்பை சேகரிக்கின்றனர். ஆனாலும் மக்கள் குப்பைகளை வீதியில் கொட்டுகின்றனர். இதுகுறித்து கவுன்சிலர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு குப்பைகள் கொட்டுபவர்களை புகைப்படம் பிடித்து யாராவது அனுப்பினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ரூ.61 கோடி கடன்

மேலும் கூட்டத்தில் மின்தடை ஏற்படும் நேரங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுவதாக கவுன்சிலர்கள் கூறியதற்கு, "இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நகரில் 3 இடங்களில் ஜெனரேட்டர் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. அதற்கான திட்ட அனுமதி வந்துவிட்டது. விரைவில் அமைக்கப்பட்டு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்" என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார்.

வார்டு பகுதிகளில் சாலை சீரமைப்பு, ஆழ்துளை குழாய் கிணறு சீரமைப்பு, குடிநீர் தொட்டி சீரமைப்பு உள்பட பல்வேறு தேவைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். அப்போது ஆணையாளர் கணேசன் கூறும்போது, "தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் மின்கட்டணம் மட்டும் ரூ.11 கோடி செலுத்தப்படுகிறது. நகராட்சிக்கு ரூ.61 கோடி கடன் சுமை உள்ளது. ஆண்டுக்கு ரூ.27 கோடி வரி வருவாய் வர வேண்டும். ஆனால், வரி செலுத்துவதில் மக்கள் சுணக்கமாக இருக்கிறார்கள். உரிய காலத்தில் மக்கள் பாக்கியின்றி வரி செலுத்தினால் தான் நகராட்சி கடன் சுமை குறைந்து, புதிதாக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த ஏதுவாக இருக்கும்" என்றார்.

சலசலப்பு

கூட்டத்தின்போது, அ.தி.மு.க. கவுன்சிலர் கிருஷ்ணபிரபா பேசும்போது, "தேனி சின்னக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்ததாகவும், அப்போது கலெக்டர் தெரிவித்ததாக சில கருத்துகளை தெரிவித்தார். அது சர்ச்சைக்குரியதாக இருந்ததால், கலெக்டர் குறித்து கவுன்சிலர் தெரிவித்த கருத்தை திரும்பப்பெறுமாறு நகர்மன்ற தலைவர், ஆணையாளர் ஆகியோர் கூறினர். இது கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.


Next Story