வீடு, கடைகளில் நாளை தேசிய கொடி ஏற்ற வேண்டும்


வீடு, கடைகளில் நாளை தேசிய கொடி ஏற்ற வேண்டும்
x

75-வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுமாறு கலெக்டர் அமர்குஷ்வாஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பத்தூர்

75-வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுமாறு கலெக்டர் அமர்குஷ்வாஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசியகொடி விற்பனை

75-வது சுதந்திர தினத்தையொட்டி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு மூலமாக தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. கலெக்டர் அமர் குஷ்வாஹா முதல் விற்பனையை தொடக்கி வைத்து பேசியதாவது:-

75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக 3-வது தளத்தில் சி-பிளாக்கில் இயங்கி வரும் மகளிர் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் பொதுமக்கள் வாங்குவதற்கு ஏதுவாக ஒரு தேசியக்கொடி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை (சனிக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்யப்படும்.

கொடியேற்ற வேண்டும்

மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி நாளை (சனிக்கிழமை) முதல் 15-ந் தேதி (திங்கட்கிழமை) வரை பொதுமக்கள் 24 மணிநேரமும் நமது இந்திய திருநாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும். நமது தேசிய ஒற்றுமையினை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டு பாலகிருஷணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சுதந்திர தினம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்த அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


Next Story