புதிய தேசிய கல்விக்கொள்கை புறக்கணிக்கப்பட வேண்டும்திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்


புதிய தேசிய கல்விக்கொள்கை புறக்கணிக்கப்பட வேண்டும்திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

புதிய தேசிய கல்விக்கொள்கை புறக்கணிக்கப்பட வேண்டும் திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு

புதிய தேசிய கல்விக்கொள்கை புறக்கணிப்பட வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில பொதுக்குழு கூட்டம்

ஈரோட்டில் நேற்று திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திராவிடர் கழக செயல் அவைத்தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, 'பெரியார் கொள்கை என்பது நெருப்பு போன்றது. அவரது கொள்கையை அணைத்து விட முடியாது. 7 வயது குழந்தை முதல் 102 பெரியவர் வரை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள். பெரியார் கொள்கை என்றும் இளமையானது' என்றார்.

தேசிய கல்விக்கொள்கை

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* மத்திய அரசு கொண்டு வரும் புதிய தேசிய கல்விக்கொள்கையை எந்த நிலையிலும் தமிழக அரசு ஏற்கக்கூடாது.

* முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி மூலம் தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் மேலோங்கி நிற்பது வெளிப்படையானது. மற்ற மாநிலங்கள் பின்பற்றத்தக்க வகையில் தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி செழித்தோங்கி இருப்பதையும் சுட்டிக்காட்டி புதிய தேசிய கல்விக்கொள்கை புறக்கணிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

* மத்திய அரசின் இந்தி, சமஸ்கிருத ஆதிக்க வெறியை எதிர்த்து இந்திய அளவில் மதசார்பற்ற சமூக நீதி அமைப்புகள், மொழி வாரி மாநில உணர்வோடு முயற்சித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கான முன்னெடுப்பை திராவிடர் கழகம் மேற்கொள்ளும்.

வீழ்த்த வேண்டும்

* 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மதசார்பற்ற, ஜனநாயக சமூக நீதி சக்திகள் அரசியல் கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி, அனைவரும் ஒன்றிணைந்து மத்திய பா.ஜனதா தலைமையிலான பாசிச ஆட்சியை வீழ்த்த வேண்டும்.

* அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் செல்லாது என்ற சென்னை ஐகோட்டின் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு தக்க சட்ட நிபுணர்களை நியமித்து தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து வெற்றி காண வேண்டும்.

இடஒதுக்கீடு

* தகவல் தொழில் நுட்ப திருத்த விதிகளை திரும்ப பெற வேண்டும். "நீட் மற்றும் நெக்ஸ்ட்" நுழைவுத்தேர்வுகளை நிரந்தரமாக நீக்க வேண்டும். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story