காதல் திருமணம் செய்த புதுப்ெபண் மயங்கி விழுந்து சாவு
ஜோலார்பேட்டை அருகே காதல் திருமணம் செய்து 1½ மாதமே ஆன நிலையில் புதுப்பெண் இறந்தார். அவரது இறப்பு குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை அருகே காதல் திருமணம் செய்து 1½ மாதமே ஆன நிலையில் புதுப்பெண் இறந்தார். அவரது இறப்பு குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் திருமணம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கூத்தாண்ட குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் சுரேஷ் (வயது 25), திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரும், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலை, புதூர்நாடு ஊராட்சி சின்னவட்டானூர் பகுதியை சேர்ந்த காளி என்பவரின் மகள் சுபாஷினியும் (20) காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 1½ மாதத்திற்கு முன்பு இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சுரேஷ் தனது வீட்டில் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
உடல்நிலை பாதிப்பு
சுபாஷினி, கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுபாஷினி மயங்கி விழுந்தார்.
அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷினி இறந்தார். இதுகுறித்து சுபாஷினியின் தாயார் மாரி, ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருமணமாகி 1½ மாதமே ஆன நிலையில் சுபாஷினி இறந்துள்ளதால் அவரது இறப்பு குறித்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
காதலித்து திருமணம் செய்த 1½ மாதத்தில் இளம்பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.