நீலகிரி பாகன் தம்பதி நெகிழ்ச்சி...
முதுமலையில் எடுத்த ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்து உள்ளது. இதனால் நீலகிரி பாகன் தம்பதி நெகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கருப்பு-வெள்ளையை கடந்து கலர், கலராய் கனவுகளுக்குள் வந்து, தொழில்நுட்பத்தில் சிகரத்தை தொட்டு விட்டபோதும்....
அதன் கடைசி உச்சம் என்பது ஆஸ்கார்தான்...
ஆம்...ஆஸ்கார் என்கிற உயரிய விருது கிடைத்தால் போதும்...அதுதான் உலக சினிமாவின் ஒட்டுமொத்த உச்சரிப்பு.
ஆஸ்கார் என்பது அமெரிக்காவில், தி அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட் அண்ட் சயின்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் திரைத்துறைக்கு வழங்கும் மிக உயர்ந்த விருதாகும். 1929-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதி தொடங்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழா 94 ஆண்டுகளை கடந்து விட்டது.
95-ம் ஆண்டுக்கான விருது தேர்வின் இறுதிபட்டியலில் முதுமலை புலிகள் காப்பகத்தில் படமாக்கப்பட்ட தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant whisperers) ஆவண திரைப்படம் இடம் பிடித்து....தற்போது அதனை கைப்பற்றிகொண்டு.....அகில உலக சினிமா துறையினரின் இதயங்களில் எல்லாம் இடம் பிடித்துவிட்டது.
இது படம் அல்ல....பாடம் என்கிற உணர்வை உலக சினிமாவின் ஒட்டு மொத்த கண்களையே கசக்க வைத்தது.
இந்த படம் ஆஸ்கார் விருதை பெறுவதற்கு கதையும்....கதைக்கான களமும்தான் காரணம் என்கின்றனர்...
நடிப்பை சொல்வதுதான் சினிமா...ஆனால் நடிப்பிலும் நிஜத்தை சொல்லும் பாத்திரங்கள் இந்த படத்தின் உயிரோட்டம். இது முதுமலைக்கே கிடைத்த இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
ஆம்... ஆஸ்கார் விருதை அள்ளிய....நீலகிரி பாகன் தம்பதி நடித்த ஆவணப்படம்....தமிழகத்துக்கு மட்டும் அல்ல...இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது. தாங்கள் நடித்த ஆவணத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது நினைத்து பார்க்க முடியாத வகையில் எங்களை மகிழ்ச்சியால் நெகழ்ச்சியடைய வைத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆவணபடத்துக்கான கரு உருவானது எப்படி என்று பார்க்கலாம்:-
முதுமலை தெப்பக்காடு முகாம்
குளு....குளு சூழலில்...பசுமை போர்வையை போர்த்தி நிற்கும், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாம்.
இங்குதான்....தாயிடம் இருந்து பிரிந்து தவிக்கும் குட்டியானைகளை பராமரிக்கும் பழங்குடியின தம்பதியின் யதார்த்த வாழக்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணபடம்தான் இது...
ஆசியாவிலேயே நூற்றாண்டுகளை கடந்தது நீலகிரி மாவட்ட முதுமலை புலிகள் காப்பகம். இங்கு யானை, புலி, கரடி என பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றை பராமரிக்க வனத்துறையினரும், தன்னார்வலர்களும் சில பழங்குடியின மக்களும் பணியாற்றி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் குறிப்பிட தகுந்தவர்கள் தான் பொம்மன்-பெள்ளி தம்பதி.
யானைகளை பராமரிப்பதையே பணியாக கொண்ட இவர்கள் அவற்றின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இதன் காரணமாகவே யானைகள் அவர்களின் வாக்கிற்கு கட்டுப்படும் சூழலை கடைபிடித்து வருகிறது.
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து வந்து கும்கி யானைகளாக மாற்றவும், வனத்தில் தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை பராமரிக்கும் பணியையும் பாகன்கள் செய்து வருகின்றனர்.
இதில் பொம்மன், பெள்ளி என்ற தம்பதி முதுமலை வளர்ப்பு யானைகள் காப்பகத்தில் பணியாற்றும் பாகன்கள் ஆவர்.
கடந்த 26.5.2017 அன்று.... கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி இறந்த தாய் யானையை பிரிந்து தவித்த குட்டியை(ரகு) முதுமலை காப்பகத்திற்கு வனத்துறையினர் கொண்டு வந்தனர்.
இதேபோல் சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்து தவித்த 5 மாத குட்டி யானையையும் (பொம்மி) 26.9.2019-ந் தேதி அழைத்து வந்தனர். இந்த யானைகளை பராமரிக்கும் பணி பொம்மன், பெள்ளி இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அந்த யானைகளுக்கு ரகு, பொம்மி என்று பெயரிட்டு அவர்கள் வளர்ப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த கார்த்திகி கொன்சால்வ்ஸ் என்ற பெண் திரைப்பட இயக்குனர் யானைகள் பராமரிப்பு பற்றி ஆவணப்படம் தயாரிக்க வனத்துறையிடம் அனுமதி பெற்றார். இதன் பின்னர், முகாமில் ரகு, பொம்மியின் வளர்ப்பு பணியில் ஈடுபடும் பொம்மன், பெள்ளி ஆகியோரை மையமாகக் கொண்டு ஆவண குறும்படத்தை தயாரிக்க தொடங்கினார் கார்த்திகி கொன்சால்வ்ஸ். யானை மற்றும் பாகனுக்கு இடையே நிலவும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
2 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஆஸ்கார் விருதுக்கான தேர்வு பட்டியலுக்கு கடந்த ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது. பின்னர் ஜனவரி மாதத்தில் இறுதி பட்டியலுக்கு வந்து தற்போது ஆஸ்காரை சூடிக்கொண்டுள்ளது.
இது.....வன அதிகாரிகள், வனத்துறையினர் மற்றும் முதுமலையில் வசிக்கும் ஆதிவாசி மக்களை அளவில்லாத மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர்களை விட அதில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன்-பெள்ளி ஆகியோர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டனர்.
குழந்தைகள் போல் வளர்த்தோம்
தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கியது குறித்து குட்டி யானைகளை பராமரித்து வந்த பாகன் மனைவி பெள்ளி கூறியதாவது:-
எனது வீட்டுக்காரர் தருமபுரியில் 3 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதால், அதனுடைய குட்டிகளை பிற காட்டு யானைகளுடன் சேர்க்கும் பணிக்காக சென்று விட்டார். நாங்கள் படிக்க வில்லை. ஆனால் இன்றைக்கு உலகம் முழுவதும் எங்களைப் பற்றி பேசுகிறார்கள். பொம்மி, ரகு குட்டி யானைகளால் பெரிய புகழ் கிடைத்து உள்ளது. பிறந்து 3 மாதங்கள் மட்டுமே ஆன பொம்மி மற்றும் ரகு குட்டிகளை காப்பாற்ற முடியாத நிலையில் கொண்டு வந்தார்கள்.
தினமும் மடியில் படுக்க வைத்து அதற்கு பால் கொடுத்து பராமரித்து வந்தோம். ரகு குட்டி யானையின் உடலில் காயங்கள் ஏற்பட்டு புழுக்கள் இருந்தது. இதனால் அதை குணப்படுத்துவது சவாலாக இருந்தது. முதுமலை கால்நடை மருத்துவக் குழுவினர் வழங்கும் மருந்துகளை குறித்த நேரத்தில் இரவு பகல் பாராது தொடர்ந்து வழங்கி வந்ததால் உடல்நிலை தேறி நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பிழைக்க வைப்பது கடினம் என்று கூறிய குட்டி யானைகளை பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் குழந்தைகள் போல் வளர்த்து வந்தோம். இன்றைக்கும் எங்களை கண்டதும் எங்கு இருந்தாலும் ஓடி வந்து தும்பிக்கையால் தொட்டவாறு நிற்கும்.
2 குட்டி யானைகளும் நன்றாக இருந்தால் போதும். எனது பேரன், பேத்தியை கூட சரியாக பார்க்க போகாமல் கஷ்டப்பட்டு வளர்த்ததால் ஆவணப்படம் மூலம் முதுமலைக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கு பெருமை கிடைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா கூறும்போது, ஆசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்தது முதுமலை புலிகள் காப்பகம். இங்கு எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு உயரிய விருதான ஆஸ்கர் கிடைத்திருப்பது பாகன்கள், வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக உள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இது குறித்து நேற்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பாகன் பொம்மன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவுக்கு பெருமை
நான் நடித்த குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தாயை இழந்த ஆண் குட்டி யானை ரகு பலத்த காயங்களுடன் இருந்தது. அதனை முதுமலை சரணாலயத்துக்கு கொண்டு சென்று வளர்த்து வந்தேன்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயை இழந்த பெண் குட்டி யானை பொம்மியும் அங்கு கொண்டுவரப்பட்டது. இந்த 2 குட்டி யானைகளையும் என் ஒருவனால் பராமரிக்க சிரமமாக இருந்தது. இதனால் என் மனைவி பெள்ளி உதவியுடன் 2 குட்டி யானைகளையும் பராமரித்து வந்தேன்.
அப்போது தான் தாயை பிரிந்த குட்டி யானைகளை பற்றி 'தி எலிபண்ட் விஸ்பரரஸ்' என்ற ஆவண குறும்படம் எடுப்பதற்காக இயக்குனர் கார்த்திகி கான்சல்வேஸ் என்னை அணுகினார். மேலும் அந்த குறும்படத்தில் என்னையும், பெள்ளியையும் கணவன்-மனைவியாக நடிக்கும் படி கூறினார்.
அந்த குறும்படத்தில் தாயை இழந்த குட்டி யானைகளை பராமரிக்கும் முறை, அவற்றின் மனநிலை, மனிதர்களுடன் அவை பழகும் விதம் ஆகியவை சிறந்த முறையிலும், அழகாகவும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. நம் பிள்ளைகளை வளர்த்து திருமணம் செய்து வைப்பது போல, குட்டி யானைகள் ரகு, பொம்மிக்கு மாலை அணிவித்து திருமணம் நடத்தி வைத்தோம்.
ஆவண படம் எடுக்கும் போது எனக்கும், பெள்ளிக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆவண படத்தில் நடிக்க நாங்கள் எந்த ஊதியமும் பெறவில்லை. சிறந்த ஆவண குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதினை வென்ற தி எலிபண்ட் விஸ்பரரஸ் படத்தால் இந்தியாவிற்கே பெருமை கிடைத்துள்ளது. யானைகளை அன்புடனும், அக்கறையுடனும் பராமரிக்க வேண்டும் என்பதே என் ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.