நீலகிரியில் 1,859 மி.மீட்டர் மழை பதிவு
கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் 1,859 மி.மீட்டர் மழை பதிவானது. கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகமாக மழை பெய்துள்ளது.
ஊட்டி,
கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் 1,859 மி.மீட்டர் மழை பதிவானது. கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகமாக மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம். இதேபோல் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்கிறது. நீலகிரியில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும். கடந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை மழையும், பருவமழைக்கு நிகராக வெளுத்து வாங்கியது. மேலும் வடகிழக்கு பருவமழையும் வழக்கத்தை விட கூடுதலாக பெய்தது.இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் இருப்பு அதிகமாக உள்ளது. நீலகிரியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட அணைகளில் தற்போது 80 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது. இதனால் மின் உற்பத்தியும் சீராக 600 முதல் 800 மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்பட்டது.
1,859 மி.மீட்டர் பதிவு
கோடை மழை அளவு குறித்து இந்திய மண் மற்றும் பாதுகாப்பு நிறுவன விஞ்ஞானியும், தலைவருமான சுந்தராம்பாள் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 700 மில்லி மீட்டர், வடகிழக்கு பருவமழை சராசரியாக 300 மில்லி மீட்டரும், கோடைமழை 230 மில்லி மீட்டரும் பதிவாகும்.
ஆனால். கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் கோடை மழை 454 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இதேபோல் தென்மேற்கு பருவமழையும் 120 சதவீதம் கூடுதலாக பெய்தது. இதன் மூலம் அதாவது கடந்த ஆண்டு கோடை மழை, தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என மொத்தமாக 1,859 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது சராசரியை விட அதிகம்.
124 நாட்கள்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளில் கடந்த ஆண்டுதான் கூடுதலாக மழை பொழிவு பதிவாகி உள்ளது. அதேபோல் வழக்கமாக ஆண்டுதோறும் 94 நாட்கள் மழைப்பொழிவு பதிவாகி இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு 124 நாட்கள் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. ஒரு நாளைக்கு 2.5 மில்லி மீட்டர் மழைபொழிவு இருந்தால், அன்றைய நாள் மழை நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.