ஜவுளிக்கடையில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையன்?


ஜவுளிக்கடையில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையன்?
x

திண்டுக்கல்லில், ஜவுளிக்கடையில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையனாக இருக்கலாம் என்று கருதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கிழக்கு ரதவீதியில் நியூ பார்வதி ஜவுளிக்கடை உள்ளது. இந்த ஜவுளிக்கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர் புகுந்தார். பின்னர் கடையின் 4-வது தளத்தில் இருந்த அறைக்குள் நுழைந்து லாக்கரை உடைக்க முயன்றுள்ளார். லாக்கரை உடைக்க முடியாததால் 4 தளங்களிலும் கல்லாப்பெட்டிகளில் இருந்த ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டார்.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையனை பிடிக்க இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். ஜவுளிக்கடைக்கு அருகில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் வழியாக மர்ம நபர் உள்ளே புகுந்து, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார். லாக்கர் இருந்த அறைக்குள் புகுந்து அதை உடைக்க முயன்றது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

எனவே ஜவுளிக்கடையில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. ஆனால் அது வடமாநிலத்தை சேர்ந்த இளைஞன் போன்று இருக்கிறது. இதனால் ஜவுளிக்கடையில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையனாக இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story