அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய வடமாநில வாலிபர்கள்


அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய  வடமாநில வாலிபர்கள்
x

திருவெறும்பூர் அருகே மத்திய படைக்கலன் தொழிற்சாலை குடியிருப்பில் அடுத்தடுத்த வீடுகளில் வடமாநில வாலிபர்கள் நகை-பணத்தை திருடி சென்றனர். மேலும் 6 வீடுகளில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி

திருவெறும்பூர் அருகே மத்திய படைக்கலன் தொழிற்சாலை குடியிருப்பில் அடுத்தடுத்த வீடுகளில் வடமாநில வாலிபர்கள் நகை-பணத்தை திருடி சென்றனர். மேலும் 6 வீடுகளில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்

திருவெறும்பூர் அருகே மத்திய படைகலன் தொழிற்சாலை குடியிருப்பை சேர்ந்தவர் வர்ணன் (வயது 39). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மாமனார் தூங்கி உள்ளார். இந்த நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் ரூ.30 ஆயிரத்தை திருடியுள்ளனர். இந்த நிலையில் சத்தம் கேட்டு எழுந்த வர்ணனின் மாமனார் சத்தம் போட்டுள்ளார். அதற்குள் மர்ம ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர்.

25 பவுன் நகை திருட்டு

அதே பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (58). இவர் வீட்டைபூட்டிவிட்டு கரூருக்கு சென்று இருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு இருந்த 25 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். இதேபோல் அருகே உள்ள மற்றொரு வீட்டில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

கே.வி.பள்ளி குடியிருப்பு அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமணன் மற்றும் இன்னொரு ஆசிரியரின் வீட்டிலும் ெமாத்தம் 6 வீடுகளில் திருட்டு முயற்சி நடந்தது. இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் சம்பவம் நடந்த வீடுகளில் மோப்பம் பிடித்து விட்டு காட்டுபகுதிக்கு சென்று நின்றது.

வடமாநில வாலிபர்கள்

மேலும் அப்பகுதியில் உள்ள 14 கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் 5 கேமரா பதிவில் 18 முதல் 22 வயது மதிக்கத்தக்க 3 வட மாநில வாலிபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்களை தேடி வருகின்றனர். பாதுகாப்பு நிறைந்த மத்திய படைகலன் தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story