தமிழகத்தில் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


தமிழகத்தில் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x

தமிழகத்தில் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

வடமாநிலத்தைவிட தமிழகத்தில் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என புதுமை பெண் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

புதுமை பெண் திட்டம்

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் புதுமை பெண் திட்டம் என்று பெயரிடப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்ட தொடக்க விழா திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புதுமை பெண் திட்ட பயனாளிகளுக்கு வரவேற்பு தொகுப்பு பை மற்றும் வங்கி பற்று அட்டை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்- அமைச்சர் மக்களுக்காக காலம், நேரம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றார். ஒருகாலத்தில் பெண்கள் கல்வியை படிக்க முடியாத சூழல்நிலை இருந்தது. இந்த நிலையை மாறி இன்றைக்கு பெண்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். பெண்கள் கல்வி அறிவு பெற்றே ஆக வேண்டும் என்று முயற்சி செய்த தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய 3 பேர் ஆவர். படித்த பெண்களின் எண்ணிக்கை இன்றைக்கும் வட மாநிலத்தில் குறைந்து தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் படித்த பெண்களின் எண்ணிக்கை கூடியிருக்கின்றது.

குடும்பத்தில் ஒருவராக முதல்- அமைச்சர்

இந்த 3 பேரின் வழியில் தான் தமிழக முதல்- அமைச்சர் புதுமை பெண் திட்டத்தை தொடங்கி உள்ளார். இன்றைக்கு ஆண்களுக்கு, பெண்களுக்கு இடையே சமத்துவம் வந்து உள்ளது. மூவலூர் ராமாமிர்தம் பெண்களுக்காக போராடியவர். தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் சட்ட இயற்ற குரல் கொடுத்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். அதனால் தான் அவரது பெயர் இந்த திட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. தமிழக முதல்- அமைச்சர் நமது குடும்பத்தில் ஒருவராக இருந்து ஆட்சி நடத்தி வருகின்றார். இந்த ஆட்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக 107 கல்லூரிகளை சேர்ந்த 4403 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் வகையில் பற்று அட்டை வழங்கபட உள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 13 கல்லூரிகளை சேர்ந்த 783 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் வகையில் பற்று அட்டை வழங்கப்பட்டது.


Next Story