விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க வேண்டும் விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை


விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க வேண்டும் விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு திருச்சி மண்டல விதைப்பரிசோதனை நிலைய அலுவலர் அறிவழகன் அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான விதை பரிசோதனை நிலையமானது விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு அருகில் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் விதைகளின் முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரகக்கலப்பு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது.

மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் விவசாயிகள், சாகுபடி செய்ய உள்ள விதைகள் தரமானதாக உள்ளதா என அறிந்துகொண்டு சாகுபடி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பகுப்பாய்வு

எனவே சாகுபடி செய்யப்பட உள்ள விதைக்குவியல்களில் இருந்து விதை மாதிரிகளை எடுத்து விதைப்பரிசோதனை நிலையத்தில் பகுப்பாய்வு செய்துகொள்ளலாம். விதையின் முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரகக்கலப்பு பரிசோதனை செய்யப்படுகிறது. நன்கு சுத்தமான மற்றும் தரமான விதைகளை பயன்படுத்துவதால் சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

ஒரு விதை மாதிரியை ஆய்வு செய்திட ஆய்வு கட்டணமாக ரூ.80 மட்டுமே செலுத்த வேண்டும். ஆய்வு முடிவுகள் விவசாயிகளின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். எனவே விதைக்கும் முன் விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மூத்த வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், விழுப்புரம் என்ற முகவரியை அணுகலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவல் திருச்சி மண்டல விதைப்பரிசோதனை நிலைய அலுவலர் அறிவழகன் தொிவித்துள்ளாா்.


Next Story