பழைய பஸ் நிலையத்தின் பரிதாப நிலை


பழைய பஸ் நிலையத்தின் பரிதாப நிலை
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதியின்றி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பரிதாபமாக காட்சி அளிக்கிறது.

விழுப்புரம்

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி உந்துவண்டி நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்தது. நகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டதாலும், மாவட்ட தலைநகராக தரம் உயர்த்தப்பட்டதாலும் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. அதனை கடந்த 9.6.2000 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

அடிப்படை வசதிகள் இல்லை

இங்கு நெடுந்தொலைவு செல்லும் பஸ்களும் மற்றும் நகர, தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பில்லூர், தளவானூர், பிடாகம், பெரும்பாக்கம், காணை, கோலியனூர், வளவனூர், அனந்தபுரம், அரசூர், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய அரசு டவுன் பஸ்கள் மட்டும் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையத்தில் எந்நேரமும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தின் மீதான அக்கறை நகராட்சிக்கு குறைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இங்குள்ள பழைய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இங்கிருந்த பழைய கட்டிடங்களையெல்லாம் இடித்து அப்புறப்படுத்திவிட்டு வணிக வளாகத்திற்கான கடைகளை கட்டியுள்ளனரே தவிர பயணிகளுக்கு தேவையான எந்தவொரு அடிப்படை வசதியும் செய்யவில்லை.

துர்நாற்றத்தின் பிடியில்

இங்கு பயணிகளின் இன்றியமையாத தேவையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் வெகுநேரம் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் தவித்த வாய்க்கு குடிதண்ணீர் பருக முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதுபோல் இங்கு கட்டண கழிவறை இருக்கின்றபோதிலும் இலவச கழிவறை, சிறுநீர் கழிக்கும் இடம் இல்லாததால் பயணிகள், அவசரத்திற்கு பஸ் நிலையத்திலேயே சாலையோர வாய்க்காலில் சிறுநீர் கழித்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

அதுமட்டுமின்றி நகரின் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களில் சேரும் குப்பைகளை மூட்டைகளாக கட்டிக்கொண்டு பஸ் நிலையத்திற்குள் கொண்டுவந்து போடுகின்றனர். நகரில் குப்பைகளை கொட்டுவதற்கு வேறு எங்குமே இடமில்லாதவாறு பஸ் நிலையத்திற்குள் கொண்டு வந்து குவியல், குவியலாக போடுகின்றனர். இங்கு நாள்தோறும் 2 லாரிகள் நிறைய குப்பை மூட்டைகளை அள்ளிச்செல்லும் அளவிற்கு குப்பைகள் மூட்டை, மூட்டைகளாக மலைபோல் குவிந்துக்கிடக்கிறது. இவ்வாறு கொண்டு வந்து போடப்படும் குப்பைகள், அங்குள்ள கழிவுநீர் வாய்க்கால் அருகிலேயே போட்டுவிட்டு செல்வதால் கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. அதிலிருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. அதோடு தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் பஸ் நிலைய பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு பஸ் நிலையத்தில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. ஒருபுறம் திறந்தவெளியிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள். மற்றொரு புறம் கழிவுநீர் வாய்க்கால் அருகில் குப்பைகள் மலைபோல் மூட்டை, மூட்டைகளாக குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடாக காட்சியளிப்பதோடு துர்நாற்றத்தின் பிடியிலும் பஸ் நிலையம் சிக்கித்தவிப்பதால் இங்கு வரும் பயணிகள் மட்டுமின்றி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

நிழற்குடை இல்லை

மேலும் இந்த பஸ் நிலையத்தில் முன்பு 300-க்கும் மேற்பட்ட பயணிகள் நிற்பதற்கு தகுந்தாற்போல் பெரியளவில் நிழற்குடை இருந்தது. பழைய பஸ் நிலையத்தில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை நகராட்சி நிர்வாகத்தினர் இடித்து அகற்றும்போது அந்த பயணியர் நிழற்குடை கட்டிடத்தையும் இடித்து அப்புறப்படுத்திவிட்டனர். அதற்கு பதிலாக அங்கு பெயரளவில் சிறிய அளவிலான நிழற்குடை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வெறும் 50 பயணிகள் மட்டுமே நிற்கும் அளவிற்கு இடமுள்ளது. போதிய இருக்கை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

இதன் காரணமாக பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்குக்கூட இடமில்லாமல் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பஸ் ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. எனவே மணிக்கணக்கில் இயக்கப்படும் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு போதுமான நிழற்குடை வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தித்தர வேண்டும்.

அல்லல்படும் பயணிகள்

மேலும் இங்குள்ள பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்ற நிலையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் தினம், தினம் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதோடு, சென்னை போன்ற பெருநகரங்களைப்போல் மேற்கூரை வசதிகளுடன் கூடிய பயணியர் நிழற்குடை அமைத்து அதன் வழியாக அந்தந்த மார்க்கங்களுக்கு பஸ்கள் செல்லும் வகையில் நகராட்சி நிர்வாகம் உரிய வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story