மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை


ஓட்டப்பிடாரம் அருகே மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தனியாக இருந்த மூதாட்டி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா மருதன்வாழ்வு கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 77). இவர் சவலாப்பேரியில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி மீனாட்சி (74). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் திருமணம் ஆகி வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதனால் அழகர்சாமி தனது மனைவியுடன் மருதன்வாழ்வு கிராமத்தில் வசித்து வந்தார்.

அழகர்சாமி தினமும் கடைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் காலையில் அழகர்சாமி தனது கடைக்கு சென்றார். இதனால் மீனாட்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

நகைகள் மாயம்

இந்த நிலையில் இரவில் அழகர்சாமி வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் மீனாட்சி இறந்து கிடந்தார். இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். மீனாட்சிக்கு ஏற்கனவே இருதயம் சம்பந்தமான நோய் இருந்ததால் அவர் இயற்கையாகவே இறந்து விட்டதாக உறவினர்கள் கருதினர்.

அப்போது, மீனாட்சி முகத்தில் லேசான காயம் இருந்ததும், அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் செல்போன் மாயமாகி இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அழகர்சாமி நாரைக்கிணறு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

தனிப்படை விசாரணை

இன்ஸ்பெக்டர் தர்மர், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மீனாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்ேகாட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்ர் உத்தரவின்பேரில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

தலையணையால் அமுக்கி கொலை

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த செந்தூர் முருகன் (49), அவரது தங்கை சண்முகக்கனி (39), அழகேந்திரன் மகன் ராமர் (28) ஆகியோர் சேர்ந்து மீனாட்சி கொலை செய்தது தெரியவந்தது.

அதாவது வீட்டில் மீனாட்சி தனியாக இருந்து வந்ததை அறிந்த செந்தூர் முருகன் உள்ளிட்ட 3 பேரும் வீட்டிற்குள் அத்துமீறி நுைழந்து உள்ளனர். அங்கு இருந்த மீனாட்சியை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு, அவர் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, ½ பவுன் கம்மல் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் ெதரியவந்தது.

3 பேர் கைது

மேலும் 3 ேபரும் திருடிய நகைகளை கோவில்பட்டியில் உள்ள நிதிநிறுவனத்தில் அடகு வைத்து விட்டு கோவைக்கு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று, செந்தூர் முருகன், சண்முகக்கனி, ராமர் ஆகிய 3 பேரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓட்டப்பிடாரம் அருகே மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story