யாசகம் மூலம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை, முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்
யாசகம் மூலம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை, முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு முதியவர் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டியன் (வயது 73). சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு கையில் பணத்துடன் வந்தார்.
இது குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது:-
கடந்த 1980-ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பை சென்று அங்கு துணிகள் தேய்ப்பு (அயர்ன்) செய்யும் தொழில் செய்து வந்தேன். தொடர்ந்து யாசகம் மூலம் பலரிடம் பணம் பெற்று அங்கு உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினேன். எனது மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்து 3 குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தேன்.
பின்னர் முழு நேர யாசகம் பெற்று அந்த பணத்தை கொரோனா நிவாரண நிதி, இலங்கை தமிழ் நிவாரண நிதி, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி ஆகியவற்றுக்கு அனுப்பி வருகிறேன். அதன்படி சேலம் மாவட்டத்தில் இருந்து யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை இன்று (நேற்று) ஒரு வங்கி மூலம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளேன்.
இது வரை பல்வேறு மாவட்டங்களில் யாசகம் பெற்ற ரூ.50 லட்சத்து 80 ஆயிரம் நிதி வழங்கி உள்ளேன். ஈரோடு, செங்கல்பட்டு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் செல்லவில்லை. விரைவில் அந்த மாவட்டங்களுக்கும் சென்று யாசகம் பெற்ற அந்த பணத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.