கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது
சிங்கம்புணரி அருகே மட்டிக்கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே மட்டிக்கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மட்டிக்கண்மாய்
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவபுரிபட்டி ஊராட்சியை சேர்ந்தது மட்டிகரைப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள மட்டிக்கண்மாய் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயிலிருந்து சுமார் 600 ஏக்கர் ஆயக்கட்டு பாசனம் நடைபெறும். இந்த கண்மாய் கடந்த சில ஆண்டுகளாக கருவேல மரங்கள் ஆக்கிரமித்து தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் இருந்து சிங்கம்புணரி வழியாக வரும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலாற்று தண்ணீர் மட்டிக்கண்மாய்க்கு கொண்டு செல்லப்பட்டு கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
மறுகால் பாய்ந்தது
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் கரந்தமலை பகுதியில் பெய்த தொடர் மழையால் பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் மட்டிக்கால்வாய் வழியாக மட்டிக்கண்மாய்க்கு திருப்பி விடப்பட்டு தற்போது மட்டிக்கண்மாய் மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மட்டிக் கண்மாய் நிரம்பி நேற்று முன்தினம் இரவு தண்ணீர் மடை வழியாக மறுகால் பாய்ந்தது.
இதனால் 600 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள விவசாயிகள் மற்றும் ஆயக்கட்டு பாசனக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் மடையில் இருந்து மகிழ்ச்சி பொங்க குதித்து விளையாடினர். வருங்காலங்களில் 3 மாதத்திற்கு ஒருமுறை கண்மாயை தூர்வாரினால் அதிகமான மழை நீரை சேமிக்க முடியும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.