ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
தியாகதுருகம், கள்ளக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தியாகதுருகம்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமனம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிமுறைகளை வரன்முறை செய்ய வேண்டும், கணிணி உதவியாளர்களக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும், வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சுமார் 60-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கு அலுவலர்கள், ஊழியர்கள் செல்லாததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பல்வேறு காரணங்களுக்காக அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், அங்கு அதிகாரிகள் இல்லாததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் ஊழியர்கள், அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.