பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் காவடி பழனியாண்டவர் ஆசிரமம் உள்ளது. இங்கு பங்குனி உத்திர தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து கோவிலில் இருந்த கொடி கம்பத்துக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற 3-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 4-ந் தேதி சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடக்கிறது. 5-ந் தேதி காலையில் கோமாதா பூஜை, சுவர்ண முருகன் அலங்காரம், தங்ககவசம் சாத்துப்படி, காவடிகள் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு காவடிகள் ஊர்வலம் கோவிலை அடைதல், அதைத்தொடர்ந்து அன்னதானமும், மாலை 5 மணிக்கு 1,008 பால்குட ஊர்வலம், 5.30 மணிக்கு தேர்வடம் பிடித்து இழுத்தல் உள்ளிட்டவையும், 6-ந் தேதி சத்தாபரணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர்.