கோவில்வழியில் பயணிகள் திடீர் சாலைமறியல்
கோவில்வழியில் பயணிகள் திடீர் சாலைமறியல்
நல்லூர்,
திருப்பூர் கோவில்வழியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திருப்பூரில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பல்வேறு தொழில்செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மகா சிவராத்திரி விழா சாமி தரிசனத்திற்காக கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சென்றனர். இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மதுரை, தேனி, ராமநாதபுரம், நெல்லை, செங்கோட்டை, திண்டுக்கல், பழனி செல்ல சிறப்பு பஸ்கள் இல்லாததால் பயணிகள் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் கோவில் வழி பஸ் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்ல ஏராளமான பயணிகள் காத்து நின்றனர். ஆனால் கோவில் வழியில் இருந்து போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் நிலையம் அருகே தாராபுரம் ரோட்டில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது பற்றி தகவல் அறிந்த நல்லூர் போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களை சமாதானப்படுத்திய போக்குவரத்து அதிகாரிகள் மாற்றுப் பஸ்சில் அந்தந்த ஊருக்கு பயணிகளை அனுப்பி வைத்தனர். இதனால் நள்ளிரவு ஒரு மணி முதல் 2.30 மணி வரை தாராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இது போன்ற விசேஷ நாட்களில் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
------------