அரசு பஸ்சை தாக்க முயன்ற யானையை பொரியை வீசி விரட்டிய பயணிகள்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பஸ்சை காட்டு யானை தாக்க முயன்றது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் பொரியை வீசி யானையை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பஸ்சை காட்டு யானை தாக்க முயன்றது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் பொரியை வீசி யானையை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
யானை பசிக்கு சோளப்பொரி என்பது பழமொழி. ஆனால், பொரி வீசி யானையை விரட்டிய சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
காட்டு யானை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று காலை 8 மணியளவில் கீழ் தட்டபள்ளம் அருகே சாலையின் குறுக்கே ஆண் காட்டு யானை நின்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தொலைவில் தங்களது வாகனங்களை நிறுத்தினர். ஆனால், திடீரென வாகனங்களை நோக்கி யானை ஓடி வந்தது. மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து கோத்தகிரியை நோக்கி வந்த அரசு பஸ்சை தாக்குவதற்காக பஸ்சின் அருகே வந்தது. இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். பஸ்சில் இருந்த பயணிகள், கொண்டு வந்திருந்த பூஜை பொருட்களில் இருந்த பொரி, பூவை சாலையில் தூக்கிப் போட்டனர். இதனால் பஸ்சை தாக்க வந்த யானை, பாக்கெட்டை உடைத்து கொட்டி பொரியையும், பூவையும் தின்றது.
வாகன ஓட்டிகள் நிம்மதி
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், சாலையில் கிடந்த மற்றொரு பொரி பாக்கெட்டை எடுத்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் வீசினார். அதை கண்ட யானை அந்த பொரியை தின்பதற்காக பள்ளத்தில் இறங்கி சென்றது. இதனால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். யானை அங்கிருந்து சென்ற பின்னர் போக்குவரத்து சீரானது. அரசு பஸ்சை தாக்க வந்த யானைக்கு, பயணிகள் தங்களிடம் இருந்த பொரியை வீசிய போது, யானை பொரியை சுவைத்தபடி அங்கிருந்து சென்றது. பொரியை வீசி யானையை விரட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த 6 மாதங்களாக ஒற்றை ஆண் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்த யானை அரசு பஸ்கள், தனியார் வாகனங்களை தாக்கி சேதப்படுத்தி, தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. எனவே, காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.