நடைபாதையை முழுமையாக சீரமைக்க வேண்டும்
தொடர் மழையால் இடிந்து விழுந்த நடைபாதையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னூர்
தொடர் மழையால் இடிந்து விழுந்த நடைபாதையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடைபாதை இடிந்தது
குன்னூர் நகராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட சந்திரா காலனியில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் நடந்து செல்ல பிரதான நடைபாதை ஒன்று இருந்தது. இந்த நடைபாதையை அருகில் உள்ள கரோலினா பகுதி மக்களும் பயன்படுத்தி வந்தனர்.
இதற்கிடையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக நடைபாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதன்பின்னர் கடந்த 12-ந் தேதி பெய்த மழையில், நடைபாதையின் மறு பகுதியும் இடிந்து விழுந்தது. இதனால் நடைபாதைய பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் போர்க்கால அடிப்படையில் நடைபாதைய சீரமைக்கக்கோரி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
முழுமையாக சீரமைக்க...
இதை ஏற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது நிதியில் இருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் இருந்து நடைபாதையின் ஒரு பகுதி மட்டுமே சீரமைக்கப்படுகிறது. ஆனால் மறு பகுதி சீரமைக்கப்படாமல் உள்ளது. இதற்கு காரணம், அதற்கு தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இடிந்து விழுந்த நடைபாதையை சீரமைக்க முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் குறைந்த அளவே நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது. இதனால் நடைபாதையின் ஒரு பகுதி மட்டுமே சீரமைக்கப்படுகிறது. இதனால் யாருக்கு என்ன பயன்?. நடைபாதையை முழுமையாக சீரமைத்தால்தான் இடையூறு இன்றி பயன்படுத்த முடியும். மழை பெய்தால், நடைபாதை வழியாக வீடுகளுக்குள் தண்ணீர் வருகிறது. எனவே நடைபாதையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றனர்.