குடிநீர் பிரச்சினையால் அவதி அடைந்து வரும் துறையூர் நகராட்சி மக்கள்


குடிநீர் பிரச்சினையால் அவதி அடைந்து வரும் துறையூர் நகராட்சி மக்கள்
x

துறையூர் நகராட்சியில் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

துறையூர் நகராட்சியில் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துறையூர் நகராட்சி

திருச்சி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராட்சிகளில் முக்கியமானது துறையூர் ஆகும். இந்த நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் தலையாய பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை உள்ளது. மேலும் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இது குறித்து துறையூர் நகராட்சி மக்கள் தெரிவித்ததாவது:-

துறையூரை சேர்ந்த வக்கீல் ராஜசேகர்:- துறையூர் நகராட்சி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க காவிரி குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி பல முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் பெயர் அளவில் மட்டுமே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துறையூர் நகராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. நகராட்சி அந்தஸ்தை பெற்ற துறையூரில் ஊராட்சி அளவிலேயே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் கூட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஊராட்சியை விட அதிக அளவில் சொத்து வரி, தண்ணீர் வரி, குப்பை வரி வாங்கும் துறையூர் நகராட்சி எந்த வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது, பொதுமக்களின் வாழ்வாதாரமான குடிநீர் பிரச்சினையை நகராட்சி உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

பாரபட்சமாக....

துறையூர் பிரபாகரன் பெரியசாமி:- நான் 24-வது வார்டில் வசித்து வருகிறேன். எனது வார்டில் 10 நாட்களுக்கு ஒருமுறைதான் காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஒரு சில இடங்களில் தண்ணீர் வருவது கிடையாது. மேலும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எங்கள் பகுதியில் குடிநீர் இணைப்பு கேட்டு பணம் செலுத்தி சுமார் 10 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை. துறையூர் நகராட்சி அடிப்படை வசதியில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. நகராட்சி என பெயர் அளவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள் அறிவித்தாலும், அவை அனைத்தும் அறிவித்தபடியே உள்ளது. காவிரி கூட்டு குடிநீர் 24 வார்டுகளுக்கும் முறையாக வழங்கப்படுவதில்லை. பாரபட்சமாகவே வழங்கப்படுகிறது.

புழுக்கள்

சமூக ஆர்வலர் காமராஜ்:- நான் 13-வது வார்டில் வசித்து வருகிறேன். எனது வார்டில் பொதுமக்களின் அன்றாட தேவைக்காக பயன்படுத்தப்படும் குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. திட்டத்தில் முதல் பங்களிப்பானது துறையூர் நகராட்சி. ஆனால் இதனால் வரை துறையூர் நகராட்சியில் முழுமையாக காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அது மட்டும் இன்றி தண்ணீர் வழங்குவதும் இல்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கும் தண்ணீரை பொதுமக்களாகிய நாங்கள் பிடித்து வைத்து பயன்படுத்தும் போது 3 நாட்களுக்குள்ளேயே தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. அது மட்டும் இல்லாமல் 4 மற்றும் 5 நாட்களுக்கு மேல் உள்ள தண்ணீரில் புழுக்கள் நெளிகிறது. நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே வரியை விதிக்கிறது. வரியை முறையாக கட்டியும் எங்களது தேவையை பூர்த்தி செய்யவில்லை. நாங்கள் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு போதுமான நிதி இல்லை என்று தட்டிக் கழிக்கிறார்கள். குடிநீருக்காக பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். பேச்சுவார்த்தையில் 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்குவோம் என்று உறுதி அளிக்கிறார்கள். ஆனால் அதனை நிறைவேற்றுவதில்லை.

தூய்மைப்படுத்த...

சமூக ஆர்வலர் 15-வது வார்டு மணி:-

எங்களது வார்டில் காவிரி கூட்டு குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. காவிரி கூட்டு குடிநீருக்காக தரைமட்டத்தில் இருந்து 5 அடி ஆழம் வரை பிரதான சாலையிலேயே குழிப்பறித்து தண்ணீர் பிடித்து வருகிறார்கள். இது பற்றி பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் நாங்கள் மனு கொடுத்துள்ளோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவில் குடிநீர் பிடிக்க செல்லும் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் குழியில் விழுந்து பெரும் விபத்து ஏற்படுகிறது. எனவே தண்ணீர் பிடிக்கும் குழாய்களை மேல் பகுதியில் அமைக்க வேண்டும். காவிரி கூட்டு குடிநீர் தொட்டி பழுதடைந்து பல வருடங்களாக படிக்கட்டுகள் இல்லாமல் உள்ளது. இதனால் குடிநீர் தொட்டி பல ஆண்டுகளாக தூய்மைப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story