பாபநாசம் பணிமனையை காணியின மக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்
அரசு பஸ்களை முறையாக இயக்கக்கோரி காணியின மக்கள் நேற்று பாபநாசம் பணிமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
விக்கிரமசிங்கபுரம்:
அரசு பஸ்களை முறையாக இயக்கக்கோரி காணியின மக்கள் நேற்று பாபநாசம் பணிமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
பஸ் வசதி
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள சோ்வலாறு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட காணி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் அத்தியாவசிய தேவைகள் முதல் பள்ளி, கல்லூரி, வேலை உள்ளிட்டவற்றுக்கு பாபநாசம், அம்பை உள்பட சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து செல்லுகின்றனர். இவர்களின் வசதிக்காக பாபநாசம், அம்பை, நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 6 முறை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதில் ஒரு பேருந்து சேர்வலாறு பகுதியில் இரவு நின்று அதிகாலையில் அங்கிருந்து புறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேர்வலாறு பகுதியில் இரவில் நிறுத்தி வைக்கப்படும் பஸ் உள்பட மதியம் 1 மணிக்கு மேல் இப்பகுதிக்கு அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தர்ணா போராட்டம்
இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பள்ளி, வேலைக்கு சென்று மாலை நேரங்களில் பஸ்சில் வீடு திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் முறையாக பஸ்களை இயக்கக்கோரி அப்பகுதி பழங்குடியினர் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் நேற்று நேரில் மனு அளித்தனர். தொடர்ந்து பாபநாசம் அரசு பேருந்து பணிமனையில் இதுகுறித்து பழங்குடியினர் தெரிவித்தனர். உடனடியாக அரசு பஸ்களை முறையாக இயக்கக்கோரி திடீரென பணிமனை முன் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கை குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பணிமனை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.