வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 2 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாமல் கந்தலான சாலைகளால் அல்லல்படும் உச்சிமேடு, நாணமேடு மக்கள் தினம்தினம் விபத்துகளை சந்திப்பதால் சீரமைக்கக்கோரி புலம்பல்
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 2 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாமல் கந்தலான சாலைகளால் தினம்தினம் விபத்துகளை சந்திக்கும் உச்சிமேடு, நாணமேடு பகுதி மக்கள் சாலையை சீரமைக்கக்கோரி புலம்புகின்றனர்.
கடலூர் அருகே உள்ளது உச்சிமேடு, நாணமேடு கிராமங்கள். இந்த கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில எல்லையில் அமைந்துள்ளதாலும், கடலூர் நகரில் இருந்து அந்த கிராமங்களை பிரிக்கும் வகையில் இடையே தென்பெண்ணை ஆறு செல்வதாலும் பெரும்பாலான அதிகாரிகளின் கவனம் அந்த கிராமங்கள் மீது விழுவதில்லை.
அதனால் உச்சிமேடு, நாணமேடு, சுபஉப்பலவாடி பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. உதாரணமாக கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்பெண்ணையாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து கரைபுரண்டு ஓடியது. இதில் விளைநிலங்களை மண்மேடாக்கி சென்ற வெள்ளம், உச்சிமேடு-நாணமேடு இடையே உள்ள சாலையை அடித்துச் சென்றது.
சிரமப்படும் மக்கள்
இதனால் இருகிராமங்களுக்கும் இடையே உள்ள சுமார் 2 கி.மீ. நீளமுள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து வாகனங்களே செல்ல முடியாத அளவுக்கு கந்தலானது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், மனுக்கள் அளித்தும், எவ்வித பிரயோஜனமும் இல்லை. மேலும் இரு கிராமங்களுக்கும் இடையே உள்ள தெருமின் விளக்குகளும் எரியாததால், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் குண்டும், குழியுமான சாலைகளில் செல்ல முடியாமல் தடுமாறி கீழே விழுந்து தினம் தினம் விபத்தை சந்திக்கின்றனர்.
அவசர தேவைக்கு கூட உடனடியாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஊருக்குள் வர முடிவதில்லை. மேலும் அந்த சாலை வழியாக தினசரி செல்லும் இருசக்கர வாகனங்களும் அடிக்கடி பழுதாகி வருகிறது. இதனால் அந்த சாலை வழியாக பயணிக்கும் மக்கள் புலம்பியபடியே தான் செல்கின்றனர். சாலை உருக்குலைந்து கிடப்பதால் தான் என்னவோ, அரசு பஸ்களும் ஊருக்குள் வருவதில்லை. காலையில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதற்காக வரும் அரசு டவுன் பஸ், மாலையில் அவர்களை இறக்கி விடுவதற்காக மட்டுமே வருகிறது. இடைப்பட்ட நேரத்தில் எந்தவொரு பஸ் வசதியும் இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகள், முதியோர் அவசர தேவைக்கு கூட கடலூர் நகருக்குள் வர முடியாமல் சிரமப்படுகின்றனர்.
ஆக்கிரமிப்பால் சுருங்கிய வாய்க்கால்
அதேபோல் பெரியகங்கணாங்குப்பத்தில் இருந்து உச்சிமேடு வழியாக செல்லும் வடிகால் வாய்க்கால் இருப்பதே தெரியாத அளவிற்கு பல இடங்களில் புதர்மண்டி கிடக்கிறது. மேலும் சிலர் வாய்க்காலை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதால், வாய்க்காலின் அகலம் சுருங்கி போய் உள்ளது. இந்த வாய்க்காலை தூர்வாரி பராமரிக்காததால் தான், தென்பெண்ணையாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்த போது, வெள்ளநீர் வடியாமல் தேங்கியே நின்றது. இதை அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியும், பலனில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுத்தபாடில்லை.
இதனால் உடனடியாக சிதிலமடைந்து கிடக்கும் சாலையை சீரமைத்து தருவதுடன், மழைக்காலம் தொடங்குவதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் வாய்க்காலை தூர்வாரி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.