ஆடிபெருக்கையொட்டி தாய்மாமன் தினம் கொண்டாடிய உசிலம்பட்டி மக்கள்


ஆடிபெருக்கையொட்டி தாய்மாமன் தினம் கொண்டாடிய உசிலம்பட்டி மக்கள்
x

ஆடிபெருக்கையொட்டி உசிலம்பட்டியில் தாய்மாமன் தினம் கொண்டாடப்பட்டது.

மதுரை

உசிலம்பட்டி

ஆடிபெருக்கையொட்டி உசிலம்பட்டியில் தாய்மாமன் தினம் கொண்டாடப்பட்டது.

தாய்மாமன் சிறப்பு

தென்மாவட்டங்களில் உள்ள கலாசாரங்களும் நடைமுறைகளும் பழமையை நினைவுபடுத்தும் விதமாகவும், வருங்கால சந்ததிகளுக்கு கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவும் ஒவ்வொரு விழாக்களும் கொண்டாடப்படுவது வழக்கம்.அவ்வாறு ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை தாய் தந்தைக்கு நிகராக கருதப்படும் தாய் மாமனை போற்றும் விதமாக ஆடி 18 தினத்தை தாய்மாமன் தினமாக அறிவித்து கடந்த 6 ஆண்டுகளாக உசிலம்பட்டி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

தாய்மாமன் என்பவர் குழந்தை பிறந்தவுடன் சீனிப்பால் குழந்தைக்கு முதல் உணவாக அளிப்பதில் தொடங்கி, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், திருமண விழா மற்றும் இறுதியாக இறந்த பின்னும் தாய்மாமன் கொடியாக ஒரு செம்பு நீரை இறந்த உடலுக்கு ஊற்றி இறுதி மரியாதை செய்த பின்பே நல்லடக்கம் நடைபெறும், அந்த வகையில் இன்ப துன்பத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு தாய்மாமன் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

இதற்காக அவர் தன் உழைப்பில் சேகரிக்கும் 70 சதவீத பணத்தையும் சீதனமாக கொடுக்கும் தாய் மாமன் இந்த ஆடி மாதத்தில் வரும் ஆடி பெருக்கின் போது தனது விதை நெல்மணியையும் தங்கை குழந்தைகள் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் சீதனமாக அளிப்பது வரலாறு, இந்த தாய்மாமன் பங்களிப்பை அறிந்த பெண்கள் யாரும் சொத்திற்காக சண்டையிடுவது இல்லை எனவும் தாய்மாமன் செய்யும் சீதனமே போதும் என பெருமையோடு அவர்களை வணங்குவார்கள் என கூறப்படுகிறது. அவ்வாறு தாய்க்கு நிகராக உள்ள இந்த தாய்மாமனை போற்றும் விதமாக ஆடி பெருக்கில் தனது மொத்த பங்களிப்பையும் தரும் தாய்மாமனுக்கு மரியாதை செய்து, அவர்களிடம் ஆசி வாங்கும் மருமகன்கள், தங்களை இறுதிவரை காவல் காக்க வேல்கம்பு பரிசாக அளித்து வணங்கி வருகின்றனர்.

தாய்மாமன்களுக்கு மரியாதை

இந்த திருவிழா உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது., முன்னதாக வாலாந்தூர் காசிபுலி மந்தையில் இருந்து தாய்மாமன்களை ஊர்வலமாக அழைத்து வந்து அங்காள ஈஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, தாய்மாமன்களுக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து தாய்மாமனிடம் தானியங்களை மருமகன்கள் பெற்று ஆடி பெருக்கில் விதை விதைப்பிற்காக எடுத்து சென்றனர்.

இந்த விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தங்களது தாய்மாமன்களுக்கு மரியாதை செய்து ஆசி பெற்றனர்.


Next Story