பயிற்சி டாக்டரை தாக்கியவர் கைது


பயிற்சி டாக்டரை தாக்கியவர் கைது
x

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முதியவர் இறந்ததை தொடர்ந்து, பயிற்சி டாக்டரை தாக்கிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அரசு பெண் ஊழியர் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முதியவர் இறந்ததை தொடர்ந்து, பயிற்சி டாக்டரை தாக்கிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அரசு பெண் ஊழியர் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பயிற்சி டாக்டர் மீது தாக்குதல்

நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 65). இவர் உடல்நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், ஆஸ்பத்திரியில் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அங்கிருந்த பயிற்சி டாக்டர் நித்திஷ் ஆர்தரை தாக்கியதாக கூறப்படுகிறது.

போராட்டம்

இதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர்கள் மற்றும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து, ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பயிற்சி டாக்டரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கைது

இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் விசாரணை நடத்தி, குருசாமியின் மகள் லிங்கம்மாள் (33), அவருடைய கணவர் ரவிக்குமார் (43), உறவினர் மணிகண்டன் (31) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

பின்னர் லிங்கம்மாளின் கணவர் ரவிக்குமாரை கைது செய்தார். மற்றவர்களை வலைவீசி தேடி வருகிறார். இதில், லிங்கம்மாள் நெல்லை தாலுகா அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.


Next Story