கண்ணாடியை உடைத்தவர் கைது
ஏ.டி.எம். மையத்தில் கண்ணாடியை உடைத்தவர் கைது
நெல்லை கொக்கிரகுளத்தில் தனியார் வங்கியின் அருகில் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 2-ந்தேதி இரவில் இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க ஒருவர் சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வராததால், அவர் ஆத்திரத்தில் அங்குள்ள கதவின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் வங்கி பணிக்கு சென்ற ஊழியர்கள், ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், நெல்லை வண்ணார்பேட்டை வெற்றிவேல் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவரான மாரியப்பன் (வயது 45), ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வராத ஆத்திரத்தில், கதவின் கண்ணாடியை உடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.