1 டன் ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது
1 டன் ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுதர்சன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி ஆகியோர் மேற்பார்வையில், மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி மற்றும் பறக்கும் படை துணை தாசில்தார் வெங்கடேசன், மண்மங்கலம் தாலுகா வழங்கல் அலுவலர் சிவராஜ் ஆகியோருடன் இணைந்து வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி வெங்கமேடு ஜீவா நகர் 4-வது கிராஸ் பகுதியில் கற்பக விநாயகர் கோவில் அருகே ஒரு காலி இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டவுன் ரேஷன் அரிசி மற்றும் அதற்கு பயன்படுத்திய மொபட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த கரூர் அருகம்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.