பஸ்சிலிருந்து இறங்கி ஓடியவர் 100 மதுபாட்டில்களுடன் கைது
பஸ்சிலிருந்து இறங்கி ஓடியவர் 100 மதுபாட்டில்களுடன் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
பஸ்சிலிருந்து இறங்கி ஓடியவர் 100 மதுபாட்டில்களுடன் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவிலிருந்து வந்தவாசிக்கு செல்லும் பஸ்சில் ஒருவர் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வருவதாகவும் அவர் ஆரணி சோமந்தாங்கல் நிறுத்தத்தில் இறங்க கண்டக்டரிடம் கூறியதாகவும் ஆரணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் ஆரணி, வேலூர் நெடுஞ்சாலையில் சோமந்தாங்கல் கூட்ரோடு பஸ் நிறுத்தப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூருவிலிருந்து வந்த பஸ் சோமந்தாங்கல் கூட்ரோடு நிறுத்தத்தில் நின்றதும் பெரிய பையுடன் ஒருவர் இறங்கினார். போலீசாரை பார்த்ததும் வேகமாக அங்கிருந்து ஒடினார். போலீசார் அந்த நபரை விரட்டிச்சென்று பிடித்தபோது 100 மது பாட்டில்கள் இருந்தன.
விசாரணையில் அவர் ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 47) என்பதும் கர்நாடகத்திலிருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்க செல்வதாகவும் கூறினார்.
இதனையடுத்து பழனியை போலீசார் கைது செய்து 100 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.22 ஆயிரமாகும். இது குறித்து அவரிடம் மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.