பெருந்துறை வாரச்சந்தை வெறிச்சோடியது: வெளியூர் வியாபாரிகள் வராததால் தேங்காய் வரத்து குறைந்தது


பெருந்துறை வாரச்சந்தை வெறிச்சோடியது:  வெளியூர் வியாபாரிகள் வராததால் தேங்காய் வரத்து குறைந்தது
x

பெருந்துறை வாரச்சந்தைக்கு வெளியூர் வியாபாரிகள் வராததால் தேங்காய் வரத்து குறைந்துவிட்டதுடன், சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை வாரச்சந்தைக்கு வெளியூர் வியாபாரிகள் வராததால் தேங்காய் வரத்து குறைந்துவிட்டதுடன், சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

பெருந்துறை வாரச்சந்தை

பெருந்துறை வாரச்சந்தையில் வாரம்தோறும் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை தேங்காய் மொத்த வியாபாரம் நடைபெறும். கடந்த 40 ஆண்டுகளாக இந்த சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உருவான கொரோனா தொற்று காரணமாக பெருந்துறை வாரச்சந்தையில் தேங்காய் விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. பிறகு தொற்று பரவல் குறைந்ததும், முன்பு போல் தேங்காய் வரத்து இல்லாமல் குைறந்து விட்டது. மேலும் மொத்தமாக கொள்முதல் செய்யும் வெளியூர் வியாபாரிகளின் வருகை குறைந்து போனதால், விவசாயிகளும், சந்தைக்கு தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவதை நிறுத்தி விட்டனர்.

வெறிச்சோடியது

நேற்று நடந்த சந்தைக்கு 500 தேங்காய்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதனால் தேங்காய் குவியல்களால் நிறைந்து காணப்படும் பெருந்துறை வாரச்சந்தை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இந்த தேங்காய்களை போட்டி போட்டு வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் கேட்ட விலைக்கு தேங்காய்களை விற்றுவிட்டு விவசாயி சென்றார்.

இதுகுறித்து திங்களூரைச் சேர்ந்த வியாபாரி ராசு என்பவர் கூறுகையில், 'பெருந்துறை சந்தையில் மொத்தமாக தேங்காய்களை கொள்முதல் செய்யும் வெளியூர் வியாபாரிகள் வருகை குறைந்து போனதால் தேங்காய்களை விவசாயிகள் முன்பு போல தற்போது கொண்டு வருவதில்லை. மேலும், விவசாயிகளின் இருப்பிடம் தேடி சென்று கொப்பரை தேங்காய் உற்பத்தியாளர்கள் தேங்காய்களை எடை கணக்கில் விலை பேசி வாங்கி செல்கிறார்கள்.

விவசாயிகளுக்கு அலைச்சல்...

இதன்காரணமாக சந்தைக்கு தேங்காய்களை கொண்டுவரும் அலைச்சல் விவசாயிகளுக்கு இல்லாமல் போய்விட்டது. இனிவரும் வாரங்களில், பெருந்துறை வாரச்சந்தையில் சனிக்கிழமை தேங்காய் விற்பனை நடக்குமா? என்பது தெரியவில்லை,' என்றார்.

மேலும் நேற்று பெருந்துறை வாரச்சந்தை நுழைவு வாயிலில் சுங்கம் வசூலிக்க, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story