குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்
வேடசந்தூர் அருகே, குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது.
கரூர் மாவட்டம் கட்டளை காவிரி ஆற்றில் இருந்து பாளையம், கோவிலூர் ஆகிய இடங்களில் உள்ள தரைமட்ட கிணறுகளுக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கோவிலூர்-வேடசந்தூர் சாலையில், முத்துப்பழனியூர் என்ற ஊருக்கு அருகே சாலையோரத்தில் பதிக்கப்பட்டிருந்த காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் நேற்று முன்தினம் இரவு திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து வீணாக ஓடியது. ஆறாக ஓடிய அந்த தண்ணீரை கண்டு அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள், குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழாய் உடைப்பு எதிரொலியாக வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஓரிரு நாட்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.