திருச்செந்தூர் கோவிலில் பெருந்திட்ட வளாக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது-கலெக்டர் செந்தில்ராஜ் பேட்டி


திருச்செந்தூர் கோவிலில் பெருந்திட்ட வளாக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது-கலெக்டர் செந்தில்ராஜ் பேட்டி
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

“திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெருந்திட்ட வளாக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது” என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

"திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெருந்திட்ட வளாக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது" என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

கலெக்டர் ஆய்வு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையும், எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்து வருகின்றன. இப்பணிகள் முதல்கட்டமாக கோவிலின் வடக்கு பகுதியிலும், நாழிக்கிணறு பகுதியிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெருந்திட்ட வளாக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் பல்வேறு துறையினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாசி தேர் திருவிழா நடைபெறுவதற்கு முன்பு அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். அதேபோல், ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி மூலம் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாதாள சாக்கடை திட்ட பணிகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து அப்புறப்படுத்துவதற்கு நகராட்சி மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து பிரச்சினைகளுக்கும் இன்னும் ஒரு மாத காலத்தில் தீர்வு காண்பதற்கு ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்செந்தூர் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளையும் ஆய்வு செய்தோம். வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் உள்ள கழிவு நீர் குழாய்களை பாதாள சாக்கடை திட்டத்தில் கட்டணம் செலுத்தி இணைக்குமாறு நகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளார்கள். அனைத்து கழிவு நீர் குழாய்களும் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்பட்டால் நகரம் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். நகராட்சிக்கு கூடுதல் குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, ஆணையர் வேலவன், கோவில் விடுதி மேலாளர் சிவநாதன், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் அழகர்சாமி, உதவி பொறியாளர் சந்தானகிருஷ்ணன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ரவி, செல்வக்குமார், எச்.சி.எல். உதவி பொது மேலாளர் பிரவீன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story