நிலுவை சம்பளம் வழங்க தோட்ட நிர்வாகம் உறுதி
தேவர்சோலையில் தொழிலாளர்கள் போராட்டம் எதிரொலியாக நிலுவை சம்பளம் வழங்க தோட்ட நிர்வாகம் உறுதி அளித்தது.
கூடலூர்
தேவர்சோலையில் தொழிலாளர்கள் போராட்டம் எதிரொலியாக நிலுவை சம்பளம் வழங்க தோட்ட நிர்வாகம் உறுதி அளித்தது.
6-வது நாளாக போராட்டம்
கூடலூர் தாலுகா தேவர்சோலையில் தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் எனக்கோரி கடந்த மாதம் 31-ந் தேதி முதல் வழக்கம்போல் காலையில் தொழிலாளர்கள் வேலைக்கு வருகின்றனர். ஆனால் நிலுவை சம்பளத்தை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் வருவாய் துறையினர் போலீசார் மற்றும் தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சம்பளம் வழங்குவதாக தோட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் இதுவரை சம்பளம் வழங்கவில்லை. இதனால் நேற்று தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். பின்னர் 6-வது நாளாக ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பளம் வழங்க உறுதி
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். இந்த நிலையில் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்வதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் தரப்பில் தோட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது வருகிற 10, 22-ந் தேதிகளில் 2 கட்டமாக நிலுவை சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது.
இது குறித்து தொழிலாளர்கள் கூறும் போது, எழுத்துப்பூர்வமாக அளித்த உறுதியின்படி தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. நிலுவை சம்பளம் வழங்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.