அரசு வழங்கிய வீட்டில் தார் பாயை மேற்கூரையாக அமைத்து வசிக்கும் அவலநிலை
நாட்டறம்பள்ளியில் 32 வருடங்களுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழும் அபாயம் நிலையில் உள்ளதால் தார்பையை மேற்கூரையாக பயன்படுத்தி வருகிறார்கள்.
நாட்டறம்பள்ளியில் 32 வருடங்களுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழும் அபாயம் நிலையில் உள்ளதால் தார்பையை மேற்கூரையாக பயன்படுத்தி வருகிறார்கள்.
மேற்கூரையாக தார்பாய்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட காந்தி நகர் தாயப்பதெருவில் சுமார் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 32 வருடங்களுக்கு முன்பு தமிழக அரசின் இலவச தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓட்டு வீடுகள் கட்டப்பட்டு அதில் தற்போது வரை வசித்து வருகின்றனர். தற்போது இந்த ஓட்டு வீடுகளின் கூரைகள் பழுதடைந்த நிலையில் மழைக்காலங்களில் மழை நீர் கூரையின் வழியாக வீட்டுக்குள் வருகிறது.
இதனால் மழைக்காலங்களில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ஓட்டு கூரையின் மீது பிளாஸ்டிக் தார் பாயைகொண்டு மூடி வசிக்கின்றனர். மேலும் சில குடியிருப்புகள் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் பல வருடங்களாக அரசுக்கும், அரசு சார்ந்த அதிகாரிகளுக்கும் பலமுறை புகார் மனு கொடுத்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதிய வீடு வழங்க வேண்டும்
கடந்த சில நாட்களாக நாட்டறம்பள்ளி சுற்றுப்பகுதியில் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் இந்த வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் உயிருக்கு பயந்து வாழ்ந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 32 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் தற்போதும் மேற்கூரைகள் புதுப்பிக்கப்படாமல் இருந்து வருகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த வீடுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு அரசு சார்பில் வீட்டை புதுப்பிக்க வேண்டும் அல்லது அரசின் தொகுப்பு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.