விஷம் தின்ற தாய் சாவு
விஷம் தின்ற தாய் இறந்தார்.
ஜாமீனில் வெளியே வந்தார்
கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர் கோவில் வடக்கு மடவாளர் தெருவை சேர்ந்தவர் திருமலை. இவரது மனைவி பிச்சையம்மாள்(வயது 65). இவர்களுக்கு சேகர்(45), மதியழகன்(37) உள்பட 3 மகன்கள் உள்ளனர்.
திருமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். பிச்சையம்மாள் திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த மேட்டுப்பட்டி அட்டலாபட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமாக மதியழகன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சேகர் மூலம் ஜாமீன் பெற்று மதியழகன் வெளியே வந்தார்.
மயங்கிய நிலையில்...
இதையடுத்து, 15 நாட்களில் நானே வெளியே வந்திருப்பேன், என்னை ஏன் ஜாமீனில் வெளியே எடுத்தீர்கள் என்று கேட்டு நேற்று முன்தினம் பிச்சையம்மாள், சேகர் ஆகியோரிடம் மதியழகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் சேகர் வெளியே சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டை சேர்ந்த ெபண், பிச்சையம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, குருணை மருந்து(விஷம்) தின்று பிச்சையம்மாளும், மதியழகனும் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
சாவு
அங்கு பரிசோதித்தபோது பிச்சையம்மாள் இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து மதியழகன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.