டாஸ்மாக் கடையில் ஜன்னலை உடைத்து திருட முயற்சி; ஒருவர் கைது


டாஸ்மாக் கடையில் ஜன்னலை உடைத்து திருட முயற்சி; ஒருவர் கைது
x

சேரன்மாதேவியில் டாஸ்மாக் கடையில் ஜன்னலை உடைத்து திருட முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி-பாளையங்கோட்டை மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.20 மணியளவில் கடை ஊழியர்கள் பணியில் இருந்தபோது, மதுபோதையில் வந்த 2 வாலிபர்கள் ஓசிக்கு மதுபானம் கேட்டுள்ளனர். அதற்கு கடை ஊழியர்கள் கொடுக்க மறுக்கவே, அவர்களில் ஒருவர் ஆத்திரத்தில் ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைத்து உள்ளார். மற்றொருவர் ஜன்னல் வழியாக கையை விட்டு மதுபானத்தை திருட முயன்றார். இதை கவனித்த கடை ஊழியர்கள், அந்த நபரின் கையை பிடித்துக்கொண்டு மதுபான பாட்டிலை பிடுங்கினர். அப்போது மற்றொரு நபர், உடைந்த ஜன்னல் கண்ணாடி துண்டை எடுத்து ஊழியரின் கையில் குத்தினார். இதில் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

உடனே அந்த 2 நபர்களும் தப்பி ஓடினர். இதையடுத்து ஊழியர்கள் விரட்டி சென்று ஒருவரை மடக்கிப்பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்டவரை சேரன்மாதேவி போலீசில் ஒப்படைத்து புகார் மனு அளித்தனர். போலீசார் விசாரணையில் பிடிபட்டவர் மேலச்செவலைச் சேர்ந்த தங்கப்பாண்டி. மகன் சுரேஷ் (வயது 38) என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் கருத்தப்பாண்டி என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story