மோசடி கும்பலை மடக்கி பிடித்த போலீசாரால் பரபரப்பு
நெல்லை ரெயில் நிலையம் முன்பு மோசடி கும்பலை மடக்கி பிடித்த போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை ரெயில் நிலையம் முன்பு மோசடி கும்பலை மடக்கி பிடித்த போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது.
மோசடி கும்பல்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக நேற்று இரவில் சட்டவிரோத மோசடி கும்பல் தப்பி செல்வதாக நெல்லை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே உதவி போலீஸ் கமிஷனர்கள் பிரதீப், சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சாதாரண உடையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயில் நிலையம் முன்புள்ள த.மு.சாலை வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் வேகமாக சென்றது. அப்போது, அங்கு சாதாரண உடையில் பதுங்கியிருந்த போலீசார், அந்த மோட்டார் சைக்கிள்களை வழிமறித்தனர்.
மடக்கி பிடித்த போலீசார்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களை போட்டு விட்டு தப்பி செல்ல முயன்றது. எனினும் போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் தலைமறைவான மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேரை தேடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.