குற்ற சம்பவங்களை தடுக்க ரெயில்களில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை


குற்ற சம்பவங்களை தடுக்க   ரெயில்களில் மோப்பநாய் உதவியுடன்   போலீசார் தீவிர சோதனை
x

குற்றங்களை சம்பவங்களை தடுக்க ரெயில்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.

சேலம்

சூரமங்கலம்,

சிறப்பு ரெயில்கள்

விழா காலங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்கள் பல்வேறு ஊர்களுக்கு ரெயில் மூலம் பயணம் செய்வார்கள். கூட்டநெரிசலை தவிர்க்க பயணிகளின் வசதிகளுக்காக ரெயில்வே நிர்வாகம் சேலம் வழியாக சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.

மோப்ப நாய் உதவியுடன்...

அதே நேரத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் ரெயில்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் ரெயில்வே போலீசார் மோப்பநாய் உதவியுடன் ரெயில் நிலைய நுழைவுவாயில், ரெயில் நிலையம், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமராவில் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கவும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில் நிலையங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித்திரிகின்றனரா எனவும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

பட்டாசுக்கு தடை

பட்டாசுகளை ரெயிலில் எடுத்துச் செல்ல ரெயில்வே நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனையும் மீறி எடுத்து வந்தால் அவைகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

சேலம் ரெயில் நிலையத்தில் நடைமேடைகளில் ரெயிலுக்காக காத்திருக்கும் போது பயணிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும், மேலும் விலை மதிப்பு மிக்க பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம், ரெயில்களில் ஜன்னல் ஓரங்களில் அமர்ந்து பயணம் செய்யும்போது தங்களது உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும் போலீசார் பயணிகளிடம் அறிவுறுத்தினர்.


Next Story