மாணவர்களை கீழே இறக்கி வேறு பஸ்சில் அனுப்பி வைத்த போலீசார்


மாணவர்களை கீழே இறக்கி வேறு பஸ்சில் அனுப்பி வைத்த போலீசார்
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை மடக்கிய போலீசார் கீழே இறக்கி அவர்களை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை மடக்கிய போலீசார் கீழே இறக்கி அவர்களை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

படிக்கட்டில் பயணம்

நாகர்கோவில் மாநகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கல்வி கற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து செல்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் பஸ்களிலேயே வருவதால் அண்ணா பஸ் நிலையத்திலும், வடசேரி பஸ் நிலையத்திலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அவ்வாறு பஸ்களில் செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. எனவே இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்தனர்.

மாணவர்களை மடக்கிய போலீசார்

இந்த நிலையில் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கேப்ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் நோக்கி சென்ற அரசு பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து உடனடியாக அந்த பஸ்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அருண் அறிவுரை கூறினார். அப்போது அவர் கூறுகையில், "படியில் பயணம் நொடியில் மரணம் என்று சொல்வார்கள். எனவே மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தால் வேறு பஸ்சில் செல்லுங்கள். அதற்காக படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்லாதீர்கள். பெற்றோர் தங்களை படிப்பதற்காக கஷ்டப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். எனவே பெற்றோரின் கஷ்டங்களை உணர்ந்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள்" என்றார்.

எச்சரிக்கை

பின்னர் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கீழே இறக்கிய போலீசார் வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மேலும் இனி இதுபோல படிக்கட்டில் நின்றபடி தொங்கியபடி பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.


Next Story