கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை


கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை
x

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட ஆம்பூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் வீட்டில் நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திருப்பத்தூர்

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட ஆம்பூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் வீட்டில் நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அனாஸ் அலி (வயது 22). இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன், முக்கியமாக வெளிநாடுகளில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவாக பதிவுகளை போட்டு வந்ததுடன், தீவிரவாத இயக்கங்கள் இயங்கி வரும் சிரியா, மொராக்கோ என பல நாடுகளில் பலருடன் தொடர்பில் இருந்ததால் மத்திய உளவுத்துறை போலீசார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட போலீசார் இணைந்து அனாஸ் அலியின்வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் இருந்து செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, அனாஸ் அலி மீது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக ஊடகங்களில் செயல்பட்டது, தேச விரோத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது என 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

போலீசார் திடீர் சோதனை

இந்தநிலையில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பந்தமாக பல்வேறு மாவட்டங்களில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்த அனாஸ் அலியின் வீட்டில் மீண்டும் சந்தேகத்தின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இந்த சோதனை நடந்தது. சோதனையில் எந்தவித தடயமும் கிடைக்காததால் போலீசார் திரும்பி சென்றனர். இச்சம்பவத்தால் ஆம்பூரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story