பூட்டி சீல் வைக்கப்பட்ட நகைக்கடையில் போலீசார் சோதனை
பூட்டி சீல் வைக்கப்பட்ட நகைக்கடையில் போலீசார் சோதனை
திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் தனியார் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த நகைக்கடையில் நகை வாங்க சிறுசேமிப்பு, தங்க நகைகளுக்கு வட்டி இல்லாமல் கடன் தருதல் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களில் திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சேர்ந்து இருந்தனர். கடந்த ஜனவரி மாத இறுதியில் கடை தொடர்ந்து பூட்டப்பட்டு இருந்ததால் திருக்காட்டுப்பள்ளியில் பூட்டி இருந்த நகைக்கடை முன் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இதை அறிந்ததும் திருக்காட்டுப்பள்ளி போலீசார் நகைக்கடையில் பல்வேறு வகையான திட்டங்களில் சேர்ந்தவர்களை உரிய ஆதாரங்களுடன் புகார் கொடுக்க அறிவுறுத்தினர். இதுகுறித்த ்புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி நகை கடையை கடந்த மார்ச்2-ந்தேதி பூதலூர் தாசில்தார் பூட்டி சீல் வைத்தார். நேற்று காலை தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் நகைக்கடையில் வைக்கப்பட்ட சீலை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து அகற்றி கடைக்குள் புகுந்து சோதனை மேற்கொண்டனர். 10-க்கு மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடையில் இருந்த வெள்ளி, தங்க நகைகள் குறித்து கணக்கு எடுத்ததாகவும், கடையில் இருந்த ஆவணங்களை சோதனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சோதனை நடைபெறுவதை அறிந்ததும் நகைக் கடையில் பணம் கட்டியவர்கள் தங்கள் கட்டிய பணம் திரும்ப கிடைக்குமா என்ற ஆவலில் உள்ளனர்.