உரியவரிடம் ஒரு மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீசார்
தவறவிட்ட செல்போனை உரியவரிடம் ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.
திருவண்ணாமலையில் நேற்று அதிகாலையில் தொடங்கி இன்று அதிகாலை வரை பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.
கிரிவலம் செல்வதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்றார்.
அப்போது அவர் குபேர லிங்கம் அருகே ஓய்வுக்காக சாலையின் ஓரமாக அமர்ந்தார். அவரது செல்போனை அங்கேயே மறந்து வைத்துவிட்டு சென்றார்.
சிறிதுதூரம் சென்ற பின்னர் தனது செல்போனை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அந்த செல்போனின் மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
மீண்டும் அமர்ந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த செல்போனை காணவில்லை. உடனடியாக அவர் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், பயிற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேத்தரின்எஸ்தர் மற்றும் போலீசார் இணைந்து துரிதமாக செல்போன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து அஜித் குமாரின் செல்போனை போலீசார் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்தனர்.
விரைவாக செயல்பட்டு ஒரு மணி நேரத்தில் செல்போனை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்தினார்.