கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்திற்குநடைபயிற்சிக்கு சென்ற பொதுமக்களை திருப்பி அனுப்பிய போலீசார்


கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்திற்குநடைபயிற்சிக்கு சென்ற பொதுமக்களை திருப்பி அனுப்பிய போலீசார்
x

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு நேற்று நடைபயிற்சிக்கு சென்ற பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினர். மேலும் ஒரு வாரம் நடைபயிற்சி மேற்கொள்ளவும் தடை விதித்துள்ளனர்.

கடலூர்

உடற்தகுதி தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நாளை (திங்கட்கிழமை) நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடலூரில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வு வருகிற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. நாளை உடற்தகுதி தேர்வு நடைபெறும் நிலையில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, நேற்று மாலை கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு நடைபயிற்சி மேற்கொள்ள வந்த பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினர். அப்போது சிலர், நடைபயிற்சிக்கு தடை விதித்தால் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட மாட்டீர்களா என போலீசாரிடம் கூறிவிட்டு புலம்பியபடி சென்றதை காண முடிந்தது. இதனால் நடைபயிற்சி மேற்கொள்ள ஆர்வமுடன் வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

10-ந் தேதி வரை தடை

இதற்கிடையே அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை முதல் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறுவதால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை நடைபயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ளவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தினசரி நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுதப்படை மைதானத்தில் நடத்த வேண்டும்

இதுகுறித்து நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கூறுகையில், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகிலேயே ஆயுதப்படை பயிற்சி மைதானம் உள்ளது. அங்கு 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வை நடத்தாமல் பொதுமக்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் இடையூறாக அண்ணா விளையாட்டு மைதானத்தில் உடற்தகுதி தேர்வை நடத்துகின்றனர். இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் வீட்டுக்குள்ளே முடங்கும் நிலை உள்ளது. அதனால் நடைபயிற்சி மேற்கொள்ளவும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story