மாவட்ட கவுன்சிலருக்கு சம்மன் அளிக்க வந்த போலீசாரால் பரபரப்பு


மாவட்ட கவுன்சிலருக்கு சம்மன் அளிக்க வந்த போலீசாரால் பரபரப்பு
x

மாவட்ட கவுன்சிலருக்கு சம்மன் அளிக்க வந்த போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 57). தமிழக மாநில காங்கிரசை சேர்ந்த இவர், கடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவுடன் 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலராக போட்டியின்றி வெற்றி பெற்றார். பின்னர் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார். இந்தநிலையில் நேற்று சிவானந்தம் மாயனூரில் உள்ள தனது பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்தார். அப்போது ஒரு வழக்கு சம்பந்தமாக சிவானந்தத்திடம் சம்மன் கொடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ், காசிப்பாண்டியன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர். அப்போது சிவானந்தம் சம்மனை பெற்றுக் கொள்ளாமல் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கு அதிகமாக கூடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அங்கு வந்து நிருபர்களிடம் கூறுகையில், கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்க இருக்கிறது. இதனால் ஆளும் தி.மு.க. அரசு எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது.

இதனால் மாவட்ட கவுன்சிலர் சிவானந்தத்தின் மீது கடந்த ஆண்டு போடப்பட்ட வழக்கு சம்பந்தமாக 174 என்று முடித்து வைக்கப்பட்ட வழக்குக்காக விசாரணைக்கு ஆஜராகும்படி நேற்று காலை 9 மணிக்கு 10-க்கும் மேற்பட்ட போலீசார் வந்துள்ளனர். துணைத்தலைவர் தேர்தல் சமயத்தில் இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என மாவட்ட ஏ.டி.எஸ்.பி. சந்தித்த பிறகு 9-ந்தேதி ஆஜராகும்படி சம்மன் மாற்றிக் கொடுக்கின்றனர். பொய் வழக்கு போட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட ஊராட்சியில் அ.தி.மு.க. 6, தி.மு.க. 6 என இருக்கும் பட்சத்தில் குலுக்கல் முறை கொண்டு வர வேண்டும். அதில் யார் வந்தாலும் பரவாயில்லை. சிவானந்தம் மீது போலீசார் நடவடிக்கை குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம் என்றார்.


Next Story