பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபரை துணிச்சலுடன் பிடித்த பெண் போலீஸ்
மயிலாடுதுறையில் பட்டப்பகலில் பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை துணிச்சலுடன் பிடித்த பெண் போலீசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மயிலாடுதுறையில் பட்டப்பகலில் பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை துணிச்சலுடன் பிடித்த பெண் போலீசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
4 பவுன் சங்கிலி
மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை பணம்பள்ளி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி ராஜகுமாரி (வயது 38). இவர் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் 1.30 மணி அளவில் கடையின் வாசலுக்கு வந்தபோது மர்ம நபர் ஒருவர் ராஜகுமாரி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். .
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜகுமாரி கூச்சலிட்டுக்கொண்டே மர்மநபரை துரத்தியுள்ளார். அங்கிருந்து ஒரு தனியார் வணிக வளாகம் வழியாக புகுந்து ஓடிய மா்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் நேற்று மதியம் நகரம் முழுவதும் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடினர்.
துணிச்சலுடன் பிடித்த பெண் போலீஸ்
இந்த நிலையில் நேற்று மதியம் 3.30 மணியளவில் கூறைநாடு ரெயில் நிலையம் சாலையில் நடந்து சென்ற மர்மநபரை கவனித்த மயிலாடுதுறை தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு கோப்பெருந்தேவி மர்ம நபரை கண்டு அவர் தான் சங்கிலியை பறித்து சென்றவராக இருக்கக்கூடும் என்று சந்தேகித்தார். இதையடுத்து அவரது சட்டையை பிடித்துள்ளார். அப்போது அந்த நபர் கோப்பெருந்தேவியை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரது சட்டையை இருக்கி பிடித்த கோப்பெருந்தேவி 'இவன் திருடன் இவனை பிடிக்க உதவி செய்யுங்கள்' என்று அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
கைது
உடனே அங்கிருந்த பொதுமக்கள் பெண் போலீசுக்கு உதவிபுரிந்து அந்த மர்மநபரை பிடித்துக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் அங்கு வந்து மர்மநபரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.. விசாரணையில் அவர் பட்டமங்கலத்தெருவில் ராஜகுமாரியிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்றவர் என்பதும், அவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த நிசார் அலி மகன் ரசாக் ( 28) என்பதும் , தற்போது மயிலாடுதுறை கூறைநாடு எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருவதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ரசாக்கிடமிருந்து 4 பவுன் சங்கிலியை மீட்ட போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் போலீஸ் துணிச்சலுடன் தன்னந்தனியாக திருடனை பிடித்த சம்பவத்தை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.