காதலித்து ஏமாற்றிய போலீஸ்காரர்; இளம்பெண் விஷம் குடித்தார்


காதலித்து ஏமாற்றிய போலீஸ்காரர்; இளம்பெண் விஷம் குடித்தார்
x

முனைஞ்சிப்பட்டி அருகே போலீஸ்காரர் காதலித்து ஏமாற்றியதால் இளம்பெண் விஷம் குடித்தார். மேலும், அவர் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் அந்த பெண் பரபரப்பு புகார் கூறி உள்ளார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

முனைஞ்சிப்பட்டி அருகே போலீஸ்காரர் காதலித்து ஏமாற்றியதால் இளம்பெண் விஷம் குடித்தார். மேலும், அவர் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் அந்த பெண் பரபரப்பு புகார் கூறி உள்ளார்.

போலீஸ்காரர்

நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே பிள்ளையார்குளம் சி.எஸ்.ஐ. கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ். இவருடைய மகன் எலீசா (வயது 28). இவர் மணிமுத்தாறு 9-வது பட்டாலியன் பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு இவர் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்ததாகவும், அவர்கள் இருவரும் நெருங்கி பழகியதில் இளம்பெண் கருவுற்றதாகவும், பின்னர் எலீசா கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்ததில், அதனை சாப்பிட்ட இளம்பெண்ணின் கரு கலைந்ததாகவும் கூறப்படுகிறது.

இளம்பெண் விஷம் குடித்தார்

பின்னர் எலீசா காதலித்த இளம்பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டு, மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் நேற்று முன்தினம் அதிகாலையில் தனது வீட்டில் திடீரென்று ஆமணக்கு விதையை (விஷம்) அரைத்து குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, உடனே அந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

3 பிரிவுகளில் வழக்கு

இதுகுறித்து அந்த பெண் மூலைக்கரைப்பட்டி போலீசாரிடம், எலீசா தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இதுதொடர்பாக போலீஸ்காரர் எலீசா மீது இந்திய தண்டனை சட்டம் 312 (கருச்சிதைவை உண்டாக்குதல்), 406 (நம்பிக்கை மோசடி), 417 (ஏமாற்றுதல்) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story